Published : 13 Oct 2021 12:38 PM
Last Updated : 13 Oct 2021 12:38 PM

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற தங்க நகைகளை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2021) தலைமைச் செயலகத்தில், திருவேற்காடு - அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்றுப் பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 2021- 22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாகத் திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்கு நேர்த்திக் கடனாக அளிக்கும் பலமாற்றுப் பொன் இனங்களை இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 1979ஆம் ஆண்டு முதல் கற்கள், அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கம் செய்யப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி நடைமுறையில் உள்ளது.

கடந்த காலங்களில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம்- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உட்பட 9 திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள், மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 497 கிலோ 795 கிராம் தங்கம், முதலீடு செய்யப்பட்டு, அதற்கான வட்டி திருக்கோயில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், கடந்த பத்து ஆண்டு காலமாகத் திருக்கோயிலுக்கு வரும் காணிக்கை பொன் இனங்கள் பெருமளவில் சேர்ந்துள்ளன. இவ்வினங்களில் உபயோகப்படுத்த இயலாத நிலையில், உதிரியாக உள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் எவ்விதப் பயன்பாடும் இல்லாத நிலையில் பாதுகாப்பு கருதி, இவற்றை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றுவது அவசியமானது. இப்பணி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும்.

எனவே, திருக்கோயில் நலன் கருதி, தற்பொழுது திருக்கோயில்களின் தேவை போக உள்ள பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

சீரிய முறையில் இப்பணிகளைக் மேற்கொள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முறையே ராஜூ, ஆர்.மாலா மற்றும் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பலமாற்றுப் பொன் இனங்களைக் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். இதன் மூலம் திருக்கோயிலின் நிதியைப் பெருக்குவதுடன், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளுக்குச் சிறந்த பாதுகாப்பாகவும் அமையும்.

இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை அந்தந்தத் திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். மேலும், அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவன், இறைவி திருவுருவங்களுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறப்பட்டுப் பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x