Published : 23 Jun 2014 12:19 PM
Last Updated : 23 Jun 2014 12:19 PM

ராம நாராயணன் நினைவு மறக்க கூடியது அல்ல: கருணாநிதி இரங்கல்

தமிழ் திரைப்பட இயக்குனர் ராம நாராயணன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்ட மன்றத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்று அந்தத் தொகுதியிலே அரும்பணியாற்றியவரும் - கழக ஆட்சிக் காலத்தில் தமிடிநநாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டவருமான - என்னுடைய அருமைத் தம்பி, இயக்குனர் ராம நாராயணன் சிங்கப்பூரில் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ராம. நாராயணன் இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னைச் சந்தித்து, தனது நோய் பற்றிய விவரங்களை எல்லாம் என்னிடம் கூறிய போது, இவ்வளவு விரைவில் அவர் மறைந்து விடுவார் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.

"செட்டிநாடு" திரையுலகத்திற்கு வழங்கிய மாமணிகள் ஏ.வி. மெyயப்ப செட்டியார், லேனா செட்டியார், கவிஞர் கண்ணதாசன், ஏ.எல். சீனிவாசன் வரிசையில் ராம நாராயணன் இந்தத் துறையில் ஈடுபட்டு 128 திரைப்படங்களை இயக்கி நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார்.

ராம நாராயணன் என்னிடம் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். கழகத்தின் மீதும், கழக இலட்சியங்களின் மீதும் விசுவாசமும் பிடிப்பும் கொண்டு காலம் முழுவதும் கட்டுப்பாடு போற்றி வாழ்ந்தவர்.

அவரது நினைவு மறக்க கூடியதுமல்ல; மாறக்கூடியதுமல்ல; அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனக்கு நானே ஆறுதல் தேடிக் கொள்ள முயற்சிக்கிறேன்" என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x