Published : 12 Oct 2021 06:45 PM
Last Updated : 12 Oct 2021 06:45 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 6 மையங்களில் வாக்கு இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களைத் திமுக கைப்பற்றியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. 13 மாவட்ட கவுன்சிலர், 125 ஒன்றிய கவுன்சிலர், 208 ஊராட்சி மன்றத் தலைவர், 1779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,125 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 74 பேரும், 124 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 481 பேரும், 205 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 767 பேரும், 1,593 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தமுள்ள 2,125 காலிப் பதவிகளுக்கு, 190 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1,935 பதவி இடங்களுக்கு 6,487 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மாதனூர், ஆலங்காயம் ஆகிய 2 ஒன்றியங்களுக்கு கடந்த 9-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டத் தேர்தலில் 78.88 சதவீதம் வாக்குப்பதிவும், 2-ம் கட்டத் தேர்தலில் 77.85 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. அதேபோல, ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கான வாக்குகள் அக்ராஹரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கான வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கந்தலி ஒன்றியத்துக்கான வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாதனூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆம்பூர் ஆணைக்கார் ஓரியன்டல் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்ப ள்ளியிலும் எண்ணப்பட்டன. 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் டிஎஸ்பி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தாமதமாக தொடங்கப்பட்டு, மதியம் 2 மணி வரை மந்தமாகவே நடைபெற்றது. கந்திலி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று, மாலை 3 மணிக்கு பிறகு ஒவ்வொரு பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குமான வெற்றி, தோல்வியே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வெற்றி, தோல்வி பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை. திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவியும், கந்திலியில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவியும், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 2 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்டவர்களில் திமுக கூட்டணிக் கட்சியினரே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
அதேபோல, ஒன்றிய கவுன்சிலர் பதவியில், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 25 பதவியும், கந்திலி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், நாட்றாம்பள்ளியில் 15 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், மாதனூரில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், ஆலங்காயத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 124 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட்டதில் 6 ஒன்றியங்களிலும் திமுக வேட்பாளர்களே அதிக இடங்களைக் கைப்பற்றி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியையும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியைப் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT