Published : 12 Oct 2021 03:54 PM
Last Updated : 12 Oct 2021 03:54 PM
'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டம் தமிழகத்தில் 50 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று (அக். 12) சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் கருணாநிதியால் முற்போக்கான மருத்துவத் திட்டமான 'வருமுன் காப்போம்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்றனர்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு மூடுவிழா நடந்தது. அதுபோல், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்துக்கும் மூடு விழா நடத்திவிட்டனர்.
மே 7ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் 'வருமுன் காப்போம்' திட்டத்தை முன்பு இருந்ததைவிட, கூடுதலான வசதிகளுடன், கூடுதலான மருத்துவ உபகரணங்களுடன் ஆண்டுக்கு 1,000 மருத்துவ முகாம்கள் வீதம் தொடங்கிட வேண்டுமென்று நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் இதையும் அறிவித்தார்.
இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்துக்கு இப்போது கூடுதலான தேவைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செப்.29 அன்று 'கலைஞரின் வருமுன் காப்போம்' முதல்வரால் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 385 வட்டங்களிலும், வட்டத்துக்கு 3 மருத்துவ முகாம்கள் வீதமும், சென்னை நீங்கலாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில், ஒரு மாநகராட்சிக்குத் தலா 4 மருத்துவ முகாம்கள் வீதமும், சென்னையில் 15 மண்டலங்கள் உள்ளன. மண்டலத்துக்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திடுவதற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 50 இடங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அறந்தாங்கி, அரியலூர், ஆத்தூர், செய்யாறு, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இம்மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், காது, மூக்கு, தொண்டை, கால்மூட்டு, இருதய சிகிச்சை, கண் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம் மற்றும் முதியோருக்கான மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
பரிசோதனை என்கிற வகையில், ரத்தப் பரிசோதனை, ரத்த உறைதல் பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்புப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சைகள் பரிந்துரை செய்வோருக்கு, உயர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
இன்று கண்ணகி நகரில் தொடங்கி வைக்கப்பட்ட மருத்துவ முகாமில் கல்லீரல் பரிசோதனை செய்கிறார்கள். சென்னை லிவர் பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் கல்லீரல் பாதிப்பு கண்டறியப்படுகிறது.
கல்லீரல் பாதித்தாலும், உடலில் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை போன்று, கல்லீரலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, கல்லீரல் பரிசோதனையும் முகாம்களில் செய்யப்பட்டு, அவற்றின் நோய்த் தன்மைக்கு ஏற்ப மாற்று சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மாற்று சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்றால், அதை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.
கண்ணகி நகரில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இம்மருத்துவ முகாம்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம், டயாலிசிசிஸ், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை நோயர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ அலுவலர்கள் வீடு தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். இம்முகாம்களில் கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் இவற்றுக்கான சிகிச்சை அளிப்பதற்கு 1996 மற்றும் 2006ஆம் ஆண்டு திமுக மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்தபோது, மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் குடிசைப் பகுதிகளில் நடத்தப்படுவதுண்டு. கடந்த 10 ஆண்டுகளாக அம்முகாம்கள் நடைபெறவில்லை.
மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமானங்களை மருத்துவக் கல்லூரி இயக்குநர் தலைமையில் டெல்லிக்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவற்றில் நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு வரச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் வருவதாக உறுதியளித்துள்ளார்கள். அவர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு 1,650 இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் ஒப்புதல் பெறப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT