Published : 12 Oct 2021 02:43 PM
Last Updated : 12 Oct 2021 02:43 PM

உளுந்து, பச்சைப்பயறு விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல்; எப்படி?- அரசு அறிவிப்பு

சென்னை

உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021- 2022ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், புரதச்சத்து மிகுந்த பயறு வகைகளின் சாகுபடி மற்றும் உற்பத்தியை உயர்த்தும் வகையில், “பலன் தரும் பயறு உற்பத்தித் திட்டம்” அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்குக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது, காரிப் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயறை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

"விலை ஆதரவுத் திட்டம் (Price Support Scheme)" மூலம் பயறு வகைகளைக் குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக, தமிழ்நாடு மாநில ளோண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (Regulated Markets) பிரதானக் கொள்முதல் நிலையங்களாகவும், நாஃபெட் நிறுவனம் மத்திய கொள்முதல் முகமையாகவும் செயல்படும்.

நடப்பு 2021- 22ஆம் ஆண்டு பருவத்தில், 4000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்துக்குக் கிலோ ஒன்றிற்கு ரூ.63/-ம் பச்சைப் பயறுக்கு ரூ.72.75/-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். துவரையைப் பொறுத்தவரை தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ளதால், அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொள்முதலுக்காகக் கொண்டுவரப்படும் உளுந்து, பச்சைப் பயறு ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருத்தல் வேண்டும.

உளுந்து கொள்முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், பாசிப்பயறு கொள்முதல் சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் 01.10.2021 தொடங்கி 90 நாட்கள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார அட்டை மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகிப் பதிவு செய்துகொள்ளலாம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறுக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x