Published : 12 Oct 2021 01:18 PM
Last Updated : 12 Oct 2021 01:18 PM
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நீண்ட நாட்களாகக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி, கொடுங்கையூரில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதல்வர், சென்னையை மாசு இல்லாத தூய்மையான நகரமாகப் பராமரிக்கவும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாகத் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கவும், உர மையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியானது அமைச்சர்களால் இன்று (12.10.2021) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் நீண்ட நாட்களாகக் கொட்டிக் கிடக்கும் குப்பை 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் உள்ளது. இதை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியானது ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் 6 சிப்பங்களாக மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர்
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகிய இருவரும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளைக் கல் மற்றும் மணலாகப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டை இன்று (12.10.2021) தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.
இதனிடையே, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் ராயபுரம் மண்டலம், வார்டு 54-ல் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய்க் குடுவைகளை மறுசுழற்சி செய்யும் மையத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, வார்டு- 54, வால்டாக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி கட்டணமில்லாக் கழிப்பிடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், சேதமடைந்த கழிப்பறைகளை உடனடியாகச் சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்’’.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT