Published : 12 Oct 2021 12:33 PM
Last Updated : 12 Oct 2021 12:33 PM

வேலூர், ராணிப்பேட்டையில் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு 

வேலூர்/ராணிப்பேட்டை 

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக 4,312 பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 12,631 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை எண்ணும் பணி 14 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சிறு சிறு அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாகவே நடந்து முடிந்தது. வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 14 மாவட்ட கவுன்சிலர், 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 247 கிராம ஊராட்சித் தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் என மொத்தம் 2,478 பதவிகளுக்கு இரண்டு கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 14 கிராம ஊராட்சித் தலைவர்கள், 298 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் என 316 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 2 கிராம ஊராட்சித் தலைவர், 9 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. இறுதியாக 2,151 பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு சராசரி 79.35% ஆக இருந்தது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர், 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 288 கிராம ஊராட்சித் தலைவர், 2,220 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் என 2,648 பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 22 கிராம ஊராட்சித் தலைவர், 465 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் என 487 பதவிகளுக்கு, வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 2,161 பதவிகளுக்கு நடைபெற்ற இரண்டு கட்டத் தேர்தலில் 6,084 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சராசரி வாக்குப்பதிவு 81.7% ஆகும்.

ஒன்றியங்கள் வாரியான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஒன்றியத்துக்குத் தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, காட்பாடிக்கு வேலூர் சட்டக்கல்லூரி, கணியம்பாடிக்கு கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரி, அணைக்கட்டுக்கு இறைவன்காடு ஸ்ரீ அன்னை பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தத்துக்கு கே.எம்.ஜி கலைக் கல்லூரி, கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி, பேரணாம்பட்டுக்கு மரித் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில், திமிரி ஒன்றியத்துக்கு கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, ஆற்காடு ஜி.வி.சி கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, காவேரிப்பாக்கம் ஸ்ரீ சப்தகிரி பொறியியல் கல்லூரி, பனப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மஞ்சள் துண்டு

காட்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக பிரமுகர்கள் மஞ்சள் துண்டு அணிந்து வந்திருந்தனர். இதுகுறித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், கட்சி சின்னம் அணிந்த துண்டுகளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்பதால் இதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.

அதேபோல், வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட கோணிப் பைகளுக்கு ஏன் சீல் வைக்கவில்லை எனக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பெட்டிகள் வைத்த வெள்ளைத் துணிக்கு மட்டும் சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குகள் எண்ணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x