Published : 12 Oct 2021 12:17 PM
Last Updated : 12 Oct 2021 12:17 PM
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளில் இரண்டு முத்திரைகள் மற்றும் கைரேகை பதிவுகளின் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததால், செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 50 ஊராட்சித் தலைவர் மற்றும் 381 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டியுள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணிகள் நடைபெற்றதில் செல்லாத ஓட்டுகளும் அறிவிக்கப்பட்டன. செல்லாத ஓட்டுகளில் பெரும்பாலும் இரண்டு முத்திரைகள், கைரேகை பதிவு மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், சரியான இடத்தில் முத்திரை பதிவு செய்யப்படாமலும் மற்றும் வாக்குப்பதிவு செய்யாமல் அப்படியே வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் செலுத்தியிருந்தனர்.
அனைத்துப் பதவிகளுக்காகவும் பதிவான வாக்குகளில் பெரும்பாலும் மேற்கண்ட முறையிலேயே செல்லாத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கிராமப் பகுதிகளில் பதிவான வாக்குச்சீட்டுகளில் இதுமாதிரி காணப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பதிவு செய்த தபால் வாக்குச்சீட்டுகளிலும் இரண்டு முத்திரைகள் மற்றும் சரியான இடத்தில் முத்திரையிடப்படாமல் இருந்தது.
இதனால், வாக்காளர்களிடம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் விழிப்புணர்வு செய்யவில்லை என, அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இனி வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்யும் வழிமுறை குறித்து சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT