Last Updated : 09 Mar, 2016 10:28 AM

 

Published : 09 Mar 2016 10:28 AM
Last Updated : 09 Mar 2016 10:28 AM

தமிழ் இலக்கியங்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் வசதி அறிமுகம்: தமிழக அரசின் முயற்சிக்கு வாசகர்கள் வரவேற்பு

தமிழ் இலக்கிய நூல்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணைய கல்விக் கழகத்தின் ஓர் அங்கமான கணி தமிழ்ப் பேரவை தமிழ் இலக்கிய நூல்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக டெய்லி ஹன்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து, கணி தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மா.தமிழ்ப்பரிதி ‛தி இந்து’விடம் கூறியதாவது:

உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பிறருக்கும், தமிழ் சார்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ் கணினி மென்பொருள், தமிழர்களின் கலை, வரலாறு, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் முதலான துறைகளில் உள்ள வாய்ப்புகளையும், இணையம் சார்ந்த பயனுள்ள தகவல் திரட்டுகளையும் தருவதற்கான தமிழக அரசின் முயற்சியே தமிழ் இணையக் கல்விக் கழகம்.

தற்போது மற்றும் ஒரு புதிய முயற்சியாக தமிழ் இலக்கிய நூல்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் மின் புத்தகங்கள் செயலியை வழங்கும் டெய்லி ஹன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் மற்றும் காப்புரிமை சிக்கல்கள் இல்லாத நூல்களை இனி கைப்பேசி மூலம் படிக்கலாம். இதற்காக டெய்லி ஹன்ட் நிறுவனத்தின் செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து அதன் மூலம் இப்புத்தகங்களை படிக்கலாம். மேலும், இப்புத்தகங்களை இலவசமாக படிக்கலாம். இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே தங்களது கைப்பேசி மூலம் இப்புத்தகங்களை படிக்க முடியும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை இந்த செயலி மூலம் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்துக்குள் ஒன்றரை லட்சம் பேர் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து புத்தகங்களை படித்துள்ளனர். வாசகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு தமிழ்ப்பரிதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x