Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM
தீபாவளியையொட்டி தமிழகத்தில் மொத்தம் 16,540 சிறப்பு பேருந்துகள்இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா, போக்குவரத்துத் துறை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங் கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, நவ.1 முதல் 3-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி முடிந்த பின், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவ.5முதல் 8 வரை தினமும் இயக்க கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319சிறப்புப் பேருந்துகளும், ஏனையபிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்புபேருந்துகள் என மொத்தம் 17,719பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படவுள்ளன. அதன்படி, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக செல்லும் பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில்இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் (வழி: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி) பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வடலூர், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி பேருந்துகளும் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர், ஊரப்பாக்கம் வழியாக இயக்கப்படும். கோயம்பேடு -10, தாம்பரம் சானடோரியம் - 2 என 12 முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். மேலும், www.tnstc.in,tnstc officail app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com ஆகிய இணையதளங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 18004256151 என்ற எண்ணில் புகார்தெரிவிக்கலாம். மேற்கூறிய 4பேருந்து நிலையங்களுக்கும் மக்கள் செல்ல வசதியாக மாநகரஇணைப்பு பேருந்துகள் இயக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்
6 சிறப்பு குழுக்கள் நியமனம்
இதற்கிடையே, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க 6 சிறப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இக்குழுவினர் ஆய்வு நடத்துவார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆர்டிஓ தலைமையில் தலா5 வாகன ஆய்வாளர்கள் இடம்பெறுவர். சாலைவரி செலுத்தாதது,பர்மிட் இல்லாதது, வழக்கத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT