Last Updated : 12 Mar, 2016 08:53 AM

 

Published : 12 Mar 2016 08:53 AM
Last Updated : 12 Mar 2016 08:53 AM

எதிர்காலத்தை குறிவைக்கும் விஜயகாந்த்: தேமுதிக தனித்து போட்டி ஏன்?

திமுக, அதிமுக மீது நல்ல அபிப்ராயம் இல்லை

எதிர்காலத்தில் தேமுதிகவை வலிமை யுள்ள கட்சியாக மாற்றவே இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட போது தனித்து போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜயகாந்த் இருந் தார். அதன்படி, 2006, 2009 தேர்தல்களில் மக்கள் ஆதரவு பெருகியது. ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி மீண்டும் வந்தால், தேமுதிகவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. அப்போது திமுக ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. எனவே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாததால் அதிலிருந்து வெளியேறினோம். அதை யடுத்து, கட்சி ஆட்களை இழுக்கிற வேலைகளும் நடந்தேறின. கட்சி உடைப்பில், ஆள் இழுப்பதில் மதிமுக வுக்கு திமுக என்ன செய்தததோ, அதைத்தான் தேமுதிகவுக்கு அதிமுக செய்தது.

எனவே, 2014 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கிடையாது என்று அறிவித்தோம். இந்த இருகட்சிகளை வீழ்த்த மோடி அலையை பயன்படுத்தலாம், கட்சிக்கும் டெல்லியில் செல்வாக்கு கிடைக்கும் என்றே தே.ஜ.கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சென்றால், அதிமுக ஆட்சியில் என்ன நடந்ததோ, அதேதான் திமுக வந்தபின்னும் நடக்கும். எம்எல்ஏக்களை இழுப்பது, கட்சியினரை அழைப்பது என தேமுதிகவை உடைக்க திமுக முயற்சிக்கக் கூடும். எனவே, திமுக கூட்டணி வேண்டாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.

தேமுதிகவின் தனித்துப் போட்டி முடிவால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும், கட்சி மீதான நம்பிக்கையை மக்களிடம் மீட்டெடுக்க முடியும். இது வருங்கால தேர்தல்களில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற அளவில் தேமுதிகவுக்கு அது பெரிய அளவில் கை கொடுக்கும். தனியாக இயங்குவதன் மூலம், திமுக, அதிமுகவில் பலம் குறைந்த கட்சியை முதலில் வீழ்த்தி அந்த இடத்துக்கு தேமுதிக எதிர்காலத்தில் வர முடியும் என்றும் விஜயகாந்த் நம்புகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

702 பேர் பரிந்துரை

இதனிடையே வேட்பாளர்களை தேர்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை விஜயகாந்த் நியமித்துள்ளார். தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், பார்த்தசாரதி, பேராசிரியர் ரவீந்திரன், அழகாபுரம் மோகன்ராஜ், எல்.வெங்கடேசன் ஆகியோர் அந்தக்குழுவில் உள்ளனர். இந்தக்குழு, இன்று முதல் வேட்பாளர் தேர்வு பணியை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் கூறும்போது, “தொகுதிக்கு 3 பேர் என்கிற அடிப்படையில் மொத்தம் 702 பேரை வேட்பாளராக்குவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தேர்வுக்குழு பரிந்துரை அளிக்க வுள்ளது. கூட்டணிக்கு வேறு ஏதும் கட்சிகள் வருகின்றனவா என்பதை பார்த்துவிட்டு வேட்பாளர் பட்டியல் வெளிடப்படும். இந்த பணிகள் அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நடைபெறும்” என்றனர்.

அதிருப்தியில் நிர்வாகிகள்

தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “தேமுதிகவின் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் பொருளாதார ரீதியாக வலுவற்ற பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதிமுகவுடனான கூட்டணி வெற்றி பெற்றாலும் நன்மை ஏதும் ஏற்படவில்லை. அதிமுகவால் தேமுதிக நிர்வாகிகள் வழக்குகளை சந்தித்தனர். இதனால் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள்.

திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கிற பட்சத்தில், அந்தக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நிர்வாகிகள் அதனை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பால் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் செலவு, வாக்குச் சேகரிப்பு போன்ற பணிகள் பெரும் சவாலாகவே இருக்கும்” என்று அவர்கள் கூறினர்.

‘என் யோசனையை ஏற்றார்’

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று உடுமலை வந்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தேமுதிக தனித்து போட்டியிடும் முடிவுக்கு நானும் ஒரு காரணம். அவரை நேரில் சந்தித்து நான் சொன்ன யோசனையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளார். இதனை வரவேற்கிறேன். அதிமுக, திமுகவை விட தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெறும். தேவைப்பட்டால் பாஜக மற்றும் தமாகாவை கூட்டணியில் சேர்க்க உதவுவேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x