Published : 11 Oct 2021 08:04 PM
Last Updated : 11 Oct 2021 08:04 PM
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 25.84 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா உடனடியாக வழங்க வேண்டும் என, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53-வது கூட்டம் இன்று புதுடெல்லியில் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கர்நாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், நீர்வளத்துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, கர்நாடக மாநில காவிரி நீர்வாரி நிகரம் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.ஜெயபிரகாஷ், கேரளா நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சத்யமூர்த்தி, மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் சுஷில் குமார் மற்றும் நான்கு மாநில அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு விவரங்களைத் தெரிவித்ததுடன், தமிழகத்தின் நீர்த் தேவையைக் கருதி உடனடியாக பிலிகுண்டுலுவில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி நிலுவையில் உள்ள நீரையும் மற்றும் மாதாந்திர வாரியான நீரையும் உடனடியாக கர்நாடக அரசு அளிக்க வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என, கடந்த இரு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவிட்டும் கர்நாடக மாநிலம் திறந்துவிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இன்றைய நாள் வரை வழங்காமல் நிலுவையிலுள்ள (10.10.2021 வரை) 25.84 டிஎம்சி நீரை உடனடியாகத் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்கிட வேண்டும் என, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை முன்கூட்டியே விரைவாகக் கூட்டப்பட வேண்டும் என, தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
விவாதத்துக்குப் பிறகு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடகா நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய 14 டிஎம்சி நீரையும் பிலிகுண்டுலுவில் அளிக்க வலியுறுத்தப்பட்டது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அடுத்த 10 தினங்களுக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT