Published : 11 Oct 2021 05:39 PM
Last Updated : 11 Oct 2021 05:39 PM

அரசியலில் கால் பதிக்கிறாரா துரை வைகோ?- வைகோ சூசகம்

துரை வைகோ அரசியலில் அடியெடுத்து வைப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சூசகமாக பதிலளித்துள்ளார்.

விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் மதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், பேச்சாளருமான எரிமலை வரதன் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட எரிமலை வரதன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

“கடந்த 2 ஆண்டுகளாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர்கள் வீடுகளில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு துரை வைகோ போய்க் கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட கட்சிக்காரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்தார். அவரது படத்தைச் சுவரொட்டிகளில் போடக் கூடாது என்று கூறினேன்.

மாநாட்டுக்கு முந்தைய நாள் இரவு மாநாட்டுப் பந்தலுக்குப் போய், அங்கு துரை வைகோ என்று போடப்பட்ட சுவரொட்டிகளைக் கிழிக்கச் சொன்னேன். இனி யாராவது இதில் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்குவேன் எனச் சொன்னேன். நான் அவரை ஊக்குவிக்கவே இல்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்களைக் கொண்டுவந்து இங்கே அமர வைக்க வேண்டும் என முதலில் இருந்தே திட்டமிட்டுச் செய்கிறார்கள். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் வந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று பார்த்தேன்.

அதனை மீறி இப்போது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறித் தொண்டர்கள், எங்களுக்கு வழிகாட்டுவதற்கு நல்லதொரு வழிகாட்டி வேண்டும். அதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் துரை வைகோ என அழைத்துக்கொண்டு போகிறார்கள்.

இதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை. இந்தக் கட்சி, தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. என்னால் உருவாக்கப்பட்டதல்ல. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறையில் நிறைவேற்றப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x