Published : 11 Oct 2021 05:12 PM
Last Updated : 11 Oct 2021 05:12 PM
3 ஆண்டுகள் தவறான மின் கணக்கீடு செய்யப்பட்டதால், நுகர்வோர் பாதிக்கப்படக் காரணமான கணக்கீட்டாளர் மீது மின்வாரியம் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை சோமனூரை அடுத்த திம்மினியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி. இவரது வீட்டில் பயன்பாட்டிலுள்ள மின் இணைப்புக்கான மின் பயன்பாட்டுக் கணக்கீடு, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மின் கணக்கீட்டாளரால் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்குத் தொடக்கத்தில் சென்று கேட்டபோது, எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதிலை மின் கணக்கீட்டாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் தெரிவித்து வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, புதிதாக வந்த கணக்கீட்டாளர், மின் கணக்கீடு செய்து ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் மின்பயன்பாட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு செலுத்தவில்லையெனில் மின் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு மூலம், கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, தலைமைப் பொறியாளர் டேவிட் ஜெபசிங் உத்தரவின் பேரில், ராமசாமியின் வீட்டு மின் அளவி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக, சோமனூர் மின்வாரியச் செயற்பொறியாளர், ராமசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கீட்டாளரால் கணக்கீடு செய்யப்படும், கணக்கீடு அளவானது தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கீட்டாளரால் கணக்கீடு செய்யப்பட்ட கணக்கீட்டு அளவின் உண்மைத்தன்மையை அறியும் வகையில், மின் அளவியின் பதிவீடுகளைப் பதிவிறக்கம் செய்து மின் அளவி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன் பின்னர், கிடைத்த அறிக்கை அடிப்படையில், தங்களது மின் கட்டணத் தொகை கணக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதக் கணக்கீட்டின்படி ரூ.581 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை கணக்கீட்டாளரால் தவறாகக் கணக்கிடப்பட்ட காரணத்தால், அதன்பிறகு பெறப்பட்ட மின் அளவி ஆய்வக அறிக்கையின்படி, ரூ.6,918-ஐ மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட கணக்கீட்டாளர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT