Published : 11 Oct 2021 04:57 PM
Last Updated : 11 Oct 2021 04:57 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் பணியில் 3,438 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 567 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 9-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தலில் 78.88 சதவீதம் வாக்குப் பதிவும், 2-ம் கட்டத் தேர்தலில் 77.85 சதவீதம் வாக்குப் பதிவும் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு, வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஒவ்வொரு மையத்திலும் டிஎஸ்பி தலைமையில் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கான வாக்குகள் அக்ரஹாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கான வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கந்தலி ஒன்றியத்துக்கான வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாதனூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆம்பூர் ஆணைக்கார் ஓரியன்டல் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை நாளை (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணிக்காகத் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு 347 பேர், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு 680 பேர், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு 616 பேர், கந்திலி ஒன்றியத்துக்கு 740 பேர், மாதனூர் ஒன்றியத்துக்கு 700 பேர், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு 355 பேர் என, மொத்தம் 3,438 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 வாக்கு எண்ணும் மையங்களில் 567 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு காலை 6.30 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி அங்கேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்காகப் பதிவான வாக்குகள் ஒவ்வொன்றாக எண்ணப்பட உள்ளன.
இதற்கான தனித்தனித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆர்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் 4 விதமான வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரோஸ் நிறத்திலும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை மற்றும் நீல நிறத்தில் உள்ள வாக்குச்சீட்டுகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை பெட்டியில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சீட்டுகளை ஒவ்வொன்றாகப் பிரித்து தனித்தனிக் கட்டுகளாக அடுக்கி, அதன் பிறகு ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் அதன் பிறகு, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, அந்தந்த மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் (ஆர்.ஓ) மூலம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்டத் தேர்தல் பார்வையாளர், மாவட்டத் தேர்தல் அலுவலர் (ஆட்சியர்), தேர்தல் நடத்தும் அலுவலர், மைக்ரோ அப்சர்வர், பிளாக் அப்சர்வர் ஆகிய 5 நபர்கள் மட்டுமே கைப்பேசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசு அலுவலர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் என யாரும் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, அரசு அலுவலர்கள் யாராவது கைப்பேசியைப் பயன்படுத்துவது தெரியவந்ததால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்டத் தேர்தல் பார்வையாளர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இன்று (அக். 11) ஆய்வு செய்து அங்கு தேவையான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT