Published : 11 Oct 2021 04:31 PM
Last Updated : 11 Oct 2021 04:31 PM

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்குப் பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

வீராங்கனை சுபாவுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.

வீராங்கனை தனலட்சுமிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் வெ.சுபா மற்றும் எஸ்.தனலட்சுமி ஆகியோர், கடந்த 30.7.2021ஆம் நாளன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4x400 மீட்டர் 'கலப்பு தொடர் ஓட்டத்தில்' பங்கேற்றுப் பெருமை சேர்த்த இவ்விரு வீராங்கனைகளையும் கவுரவப்படுத்தும் வகையில், முதல்வர் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x