Published : 11 Oct 2021 01:41 PM
Last Updated : 11 Oct 2021 01:41 PM
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் குளறுபடிகளைக் களைந்து தேர்தலை நடத்தக் கோரி ஆளுநர் தமிழிசையிடம் அதிமுக மனு தந்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளதா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் கோரியுள்ளனர்.
புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ஆளுநர் தமிழிசையிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”புதுவை மாநிலத் தேர்தல் ஆணையம் தான்தோன்றித்தனமாகத் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2006 தேர்தல் நடைமுறையைப் பின்பற்றாமல் வார்டுகளைக் குறைத்துள்ளது. சுழற்சி முறையையும் பின்பற்றவில்லை. புதுவை நகராட்சி மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உள்ளாட்சித் தேர்தல் சட்ட விதிகளுக்குப் புறம்பானது. குறைக்கப்பட்ட 33 வார்டில் தாழ்த்தப்பட்டோருக்கு 6 வார்டுகள் ஒதுக்க வேண்டும். ஆனால், 4 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசின் உத்தரவு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உண்டா இல்லையா என்பதைப் பொதுமக்களுக்கு ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும். சட்டத்தில் இல்லாத இப்பிரச்சினையைக் கையில் எடுத்தக்கொண்டு ஒருசில அரசியல் கட்சிகள் சுயநலத்துக்காகப் போராட்டம் நடத்துகின்றன. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 2-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாள். 4-ம் தேதி தீபாவளி பண்டிகை. வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும்.
முதல்வர், மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் சட்ட வல்லுநர்கள் உட்பட உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, தவறில்லாத வகையில் உரிய கால அவகாசம் அளித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்".
இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT