Published : 11 Oct 2021 07:40 AM
Last Updated : 11 Oct 2021 07:40 AM
ஆம்பூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் இன்றிரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளில் 2-ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 224 வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் ஆம்பூரில் உள்ள ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணிநேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெங்கடசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளரின் முகவர் வந்து சென்றதாகவும், அந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், கட்சித் தொண்டர்கள் இன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாயில் முன்பு குவிந்தனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து அதிமுகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.
சிசிடிவி காட்சிகளை பார்வையிட தங்களை அனுமதிக்க வேண்டுமென காவல் துறையினரிடம் அதிமுகவினர் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து, ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திருமால், யுவராணி, பாலசுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் சுமார் 4 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும்தேர்தல் அலுவலர் துரைக்கும் தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாளை(திங்கள்கிழமை) சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட அனுமதிப்பதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உறுதியளித்தாககாவல் துறையினர் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT