Published : 01 Jun 2014 09:49 AM
Last Updated : 01 Jun 2014 09:49 AM

‘தி இந்து’ வேலைவாய்ப்பு முகாம் 9,500 பேர் பங்கேற்றனர்: சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நடக்கிறது

‘தி இந்து எம்பவர்’ சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 9500 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இக்கண்காட்சி இன்றும் நடக்கிறது.

வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள், தகவல்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘எம்பவர்’ பகுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ‘தி இந்து எம்பவர்’ சார்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கிய வேலைவாய்ப்பு முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் தமிழகம் மட்டுமன்றி, கர்நாடகம், சீமாந்திரா பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முகாமில் சதர்லேண்ட், சி.எஸ்.எஸ் கார்ப், எப்.எஸ்.எஸ், அஜுபா, போஸ்ச் உள்பட 7 நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக சென்னை வர்த்தக மையத்தில் 27 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஸ்டாலிலும் நடந்த பல்வேறுகட்ட நேர்காணல்களில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள இளைஞர்கள் சென்னை வர்த்தக மையத்தில் காலை 8 மணி முதலே கூட்டம் கூட்டமாகத் திரண்டனர்.

இதுதொடர்பாக எப்.எஸ்.எஸ். மென்பொருள் நிறுவத்தின் மூத்த மனிதவளத் துறை மேலாளர் ராஜா ரகுநாதன் கூறியதாவது:

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளனர். பொதுவாக சென்னையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இந்த முறை பெங்களூர், ஹைதராபாத் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

காலை 12 மணி நிலவரப்படி எங்கள் நிறுவனத்துக்கு 3 ஆயிரம் தன்விவரக் குறிப்புகள் வந்திருந்தன. 2012, 2013-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார நிலைமை சீராகி வருகிறது. வரும் காலங்களில் ஆள் எடுப்பு பணிகள் இன்னும் நிறைய நடக்கும்.

இவ்வாறு ராஜா ரகுநாதன் கூறினார்.

சனிக்கிழமை நடந்த முகாமில் 9,500 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். வேலைவாய்ப்பு முகாம் இன்றும் (ஞாயிறு) நடக்கிறது. அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x