Published : 07 Mar 2016 08:11 AM
Last Updated : 07 Mar 2016 08:11 AM

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் போஸ்டர், பேனர் தயாரிப்பு தொழில் பாதிப்பு: இரண்டரை மாதத்தில் 70% வருவாய் இழப்பு ஏற்படும் என கவலை

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் போஸ்டர், பேனர்கள் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களில் 70 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும் என தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இரண்டரை மாதம் இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் பல்வேறு வர்த்தகங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. முன்பெல்லாம் தேர்தல் என்றால் கட்சிக் கொடிகள், போஸ்டர், கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் பார்க்கும் காலமாக இருந்தது.

ஆனால், கடந்த 2 தேர்தல்களில் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் வைக்கவும் தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. இது, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் 70 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என போஸ்டர், பேனர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 25 ஆண்டுகளாக போஸ்டர், பேனர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பி.இஸ்மாயில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் போஸ்டர், பேனர்கள் தயாரிப்பு தொழிலில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இந்தத் தொழிலை சார்ந்து சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் சிலர் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் தேர்தல் வந்தால் எங்கள் தொழிலில் வருவாய் அதிகரிக்கும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகளால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எங்கள் தொழிலில் 70 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த முறை இரண்டரை மாதங்களுக்கு முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அரசியல் அல்லாத திருமணம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் மூலமே கணிசமான வருவாயை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தயாரிப்பாளர்கள் தகவல்

போஸ்டர், பேனர் தயாரிப்பாளரான தி.அய்யாதுரை, அ.உதயா ஆகியோர் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தலில் கெடுபிடி அதிகமாக இருப்பதால், பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியிடுவர். மாநில தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளும் அவ்வளவாக இருக்காது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x