Published : 10 Oct 2021 02:40 PM
Last Updated : 10 Oct 2021 02:40 PM
கரூர் நகராட்சி பகுதியில் புதை வடிகால் திட்டத்திற்கு ரூ.360 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (அக். 10ம் தேதி) நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செங்குந்தபுரம் 80 அடி சாலையில் தூய்மை கரூர் திட்டத்தின்கீழ் சாக்கடை கழிவுகள் அகற்றப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தேநீர் அருந்தினார்.
அதன்பின் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கரூர் நகராட்சியில் 2,968 தெருக்கள், 68 கி.மீட்டர் நீளத்திற்கு வடிகால்கள், 412 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைகள் உள்ளன. ஒரு நாள் ஒரு வார்டு ஒரு நாள் ஒரு ஊராட்சி என்ற சிறப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சி காலத்தில் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் பல்வேறு இடங்களில் வடிகால்களில் ஓரடி அளவிற்கு மண் திட்டுகள் தேங்கியுள்ளன. இதனால் மழைநீர் செல்ல முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறப்புத் திட்டத்தின்கீழ் நகராட்சி முழுவதும் புதிய வடிகால்கள் அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
தூய்மைப்பணியாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்ய நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கரூரில் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்களை கொண்ட தொழில் நகரம். ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் நகரம். இதனால் நகரத்தின் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். புதை வடிகால் , வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
முழுமையாக புதை வடிகால் திட்டம் மேற்கொள்ள ரூ.360 கோடி, குடிநீர் விநியோக திட்டத்தில் புதிய குழாய்கள் மாற்றி அமைக்க ரூ.40 கோடியில் சிறப்பு திட்ட பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு (planing proposal) அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரூர் நகராட்சியில் புதை வடிகால், குடிநீர் திட்டம், வடிகால் வசதி, சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு நிதிகள் தேவைப்படுகிறது. இதற்கான நிதி கோரிக்கை முதல்வரிடம் கேட்டு பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்''
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT