Published : 09 Oct 2021 07:51 PM
Last Updated : 09 Oct 2021 07:51 PM
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகச் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் இன்று (அக். 9) ஆலோசனை நடத்திய அனைத்துக் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘புதுச்சேரி மக்களுக்கு எதிராக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலைக் கண்டித்து, துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளேம். தேர்தல் ஆணையர், சட்டத்துக்குப் புறம்பாகவும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு எதிராகவும் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததைக் கண்டித்து, துணைநிலை ஆளுநரிடம் விளக்கிக் கூறினோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியின் அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு மனுவை வழங்கியுள்ளோம்.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தேர்தலை நடத்தக் கோரியுள்ளோம். மேலும், பண்டிகை நாட்களில் தேர்தலை நடத்துவது குறித்தும் குறிப்பிட்டோம். இதற்கான பொறுப்பைத் துணைநிலை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து உரிய முடிவெடுப்பார்’’ என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறும்போது, ‘‘புதுச்சேரி தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாட்டால், நல்ல ஜனநாயகமுள்ள புதுச்சேரி மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அனைத்து மக்களும், கட்சியினரும் கொதித்துள்ளனர். அதன் பேரில், இன்று பேரவைத் தலைவர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூடி எடுத்த முடிவின்படி, துணைநிலை ஆளுநரைச் சந்தித்து தெரிவித்துள்ளோம்.
தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தைத் தாண்டி, புதுச்சேரி மாநிலத்தின் சட்டவிதிகளை மீறி, தன்னிச்சையாகத் தேர்தலை நடத்தக் கூடாது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்புகளை மறுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்து தேர்தலை நடத்த வேண்டும்.
மழைக் காலம், விழாக் காலங்கள் என எதையும் ஆலோசிக்காமல் தேர்தலை அறிவித்துள்ளனர். நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தவறுகளை அதிகரித்துள்ளனர். இது தொடர்பாக திமுக மூலம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க, புதுச்சேரி முதல்வர், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அவகாசம் பெற்று முறையாகத் தேர்தலை நடத்த வேண்டும். தொடர்ந்து, மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவோம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT