Last Updated : 09 Oct, 2021 05:31 PM

1  

Published : 09 Oct 2021 05:31 PM
Last Updated : 09 Oct 2021 05:31 PM

வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாக திமுக எம்எல்ஏ மீது அதிமுக புகார்: அரசியலுக்காக தேவையற்ற பீதியைக் கிளப்புவதாக எம்எல்ஏ கருத்து

வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாக திமுக எம்எல்ஏ மீது அதிமுக புகார்.

திருச்சி

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்ததாக திமுக எம்எல்ஏ மீது அதிமுக மாவட்டச் செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள், 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று (அக்.09) காலை 7 மணியளவில் தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்ற 37-வது வாக்குச்சாவடிக்குள் சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமது, (பி.அப்துல் சமது, மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். திமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர்.) திருவெறும்பூர் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட திமுகவினர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்ததாகக் கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசுவுக்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் புகார் அனுப்பினார். அதில், "வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்ற 30, 31, 37 ஆகிய வாக்குச்சாவடிகளுக்குள் சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமது, திருவெறும்பூர் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர், தேர்தல் நடத்தை விதிகளை மீறிப் புகுந்து, வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சி செய்தது ஜனநாயகப் படுகொலை.

திமுகவினரின் செயலைக் கண்டிப்பதுடன், தேர்தல் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் நடைபெறுவதை தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்வதுடன், தேர்தல் விதிகளை மீறிய சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் பி.அப்துல் சமதுவிடம் கேட்டபோது, "37-வது வாக்குச்சாவடிக்குள் அதிமுக நிர்வாகி ஒருவர் அடிக்கடி சென்று வருவதாகத் தகவல் வந்ததால், அதுகுறித்து விசாரிப்பதற்காகச் சென்றோம். அதிமுகவினர் அரசியலுக்காக வேண்டுமென்றே தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x