Published : 09 Oct 2021 03:32 PM
Last Updated : 09 Oct 2021 03:32 PM
நாயக்கநேரி ஊராட்சியில் ஒட்டுமொத்த கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், அங்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர் இந்துமதி பாண்டியன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து தனது வாக்கை இன்று பதிவு செய்தார். இவருடன் சேர்ந்து பகல் 2 மணி நிலவரப்படி, 17 பேர் தங்களது வாக்கைச் செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (அக். 09) நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே பெரிய ஒன்றியமான மாதனூர் ஒன்றியத்தில் மொத்தம் 44 ஊராட்சிகள் உள்ளன. இதில், நாயக்கனேரி ஊராட்சியைத் தவிர மற்ற 43 ஊராட்சிகளில் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மலைகிராமமான நாயக்கநேரி ஊராட்சியில் இதுவரை அங்கு வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஊராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முறை எஸ்.சி. (பெண்கள்) பிரிவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.சி. பிரிவுக்குத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், நூதனப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி (21) என்ற பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் செய்து, அவரை நாயக்கநேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது. எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த ஒருவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறிய நாயக்கநேரி ஊராட்சி மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறினர்.
அதற்கு ஏற்ப, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும், நாயக்கநேரி ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறி மனுத்தாக்கல் செய்யவில்லை.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்துமதி பாண்டியன் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டாலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இல்லாததால், அவரால் மன்றம் அமைக்க முடியாது, எந்தத் தீர்மானமும் நிறைவேற்ற முடியாது. எனவே, நாயக்கநேரி ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி நீடிக்க முடியாது என, அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.
இருப்பினும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நாயக்கநேரி ஊராட்சி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால், அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என ஊர் மக்களை ஒருசிலர் மிரட்டி, சிலர் தாக்கப்பட்டு வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு டிஎஸ்பி சரவணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நாயக்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கநேரி கிராமத்தில் 4 வாக்குச்சாவடிகள், பனங்காட்டேரி மற்றும் காமனூர்தட்டு கிராமத்தில் தலா ஒரு வாக்குச்சாவடி என, மொத்தம் 6 வாக்குச்சாவடி மையங்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 8 முதல் 10 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9.30 மணி வரை ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. இதனால், 6 வாக்குச்சாவடி மையங்களும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி. பாலகிருஷ்ணன், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் நாயக்கநேரி மலை கிராமத்துக்குச் சென்று கிராம மக்களிடம் வாக்களிக்க வரும்படி அறிவுறுத்தினர்.
நாயக்கநேரி, பனங்காட்டேரி, காமனூர் தட்டு ஆகிய கிராமப் பகுதிகளில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி. பாலகிருஷணன் அரசு அதிகாரிகளுடன் நடந்தே சென்று, பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதிகாரிகளிடம் வாக்களிக்க வருவதாகக் கூறிய பொதுமக்கள், அவர்கள் சென்ற பிறகு தங்களது வழக்கமான பணிகளைக் கவனிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, இந்துமதி பாண்டியனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாயக்கநேரி மலைக்குச் சென்று வாக்களிக்க முன்வந்தனர்.
இதைத் தொடர்ந்து, வாக்களிக்க முன்வந்தவர்களுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு வழங்கினர். ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் தன் தாய் வீட்டில் தங்கியிருந்த இந்துமதி பாண்டியன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமனூர் தட்டு வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தனது வாக்கை இன்று பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் என 12 ஆண்கள், 5 பெண்கள் என, மொத்தம் 17 பேர் பகல் 2 மணி நிலவரப்படி வாக்களித்தனர்.
நாயக்கநேரி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள நிலையில் 17 பேர் மட்டுமே வாக்களித்தனர். மற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இருந்தாலும், வருவாய் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT