Published : 09 Oct 2021 02:35 PM
Last Updated : 09 Oct 2021 02:35 PM
மாசடையும் காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீராதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்பப் பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. இதற்கிடையில், ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும், சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து, கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உப நதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் 06.10.2021 அன்று அமைக்கப்பட்டுள்ளன.
அக்குழுக்கள், மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அவற்றில் இருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உப நதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்களால், காவிரி ஆற்றில் சென்னை ஐஐடி நிபுணர் குழு கூறியுள்ள, மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் இன்று (09.10.2021) நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால், காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, சென்னை ஐஐடி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்கூறிய குழுக்களின் ஆய்வறிக்கையின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT