Published : 07 Mar 2016 03:17 PM
Last Updated : 07 Mar 2016 03:17 PM
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடும் கட்டுப்பாடுகளையும் மீறி கிராமப்புறம் வாயிலாக முதல்கட்ட பணப் பட்டுவாடாவை நடத்த அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தடுக்க முடியாமல், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் குறித்து கண்காணிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தொகுதிக்கு மூன்று பறக்கும் படை வீதம் 6 தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரி மற்றும் காவல்கிணறில் இருந்து களியக்காவிளை மற்றும் கடலோரப் பகுதிகள் வரை கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில் தேர்தல் வட்டாட்சியர் பி.சுப்பிரமணியன் மேற்பார்வையில் தேர்தல் விதிகளை கடைப்பிடிப்பதற்கான பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
குறிப்பாக நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அவசரப்பணிக்காக செல்லும் பயணிகள் சிலர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
குமரியில் கிராமங்கள்தோறும் தற்போதே முதல்கட்டமாக பணம் பட்டுவாடா செய்ய சில அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக பறக்கும் படையினருக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அது குறித்த மேலதிக தகவல் தெரியவில்லை. இதனால், தேர்தல் பணியாற்றும் பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.
பறக்கும்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் முக்கிய இரு கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டி ருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முக்கிய தொகுதிகளுக்கு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக தற்போதே பணம் வந்துவிட்டதாக தகவல்களை கூறிவருகின்றனர். ஆனால், எங்கு, யாரிடம் அந்த பணம் உள்ளது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.
இதுதொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தெரிவிக் கலாம். வாகனங்களில் இதுவரை நடத்திய சோதனையில் கணக் கில் காட்டப்படாத பணம் ஏதும் சிக்கவில்லை. சோதனைச் சாவடிகள், முக்கிய சந்திப்புகளில் நடந்து வரும் சோதனைகளுக்கு மத்தியில், தற்போது வீடுகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என ரகசியமாக விசாரித்து வருகிறோம்.
அதிகாலையில் வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவோர் மற்றும் பிற பொருட்கள் வழங்குவோர் மூலமோ, நேரடியாகவோ பணம் வழங்கப்படுகிறதா என கண் காணித்து வருகிறோம்” என்றார் அவர்.
மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் கண் காணிப்புக் குழு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பணம் பட்டுவாடாவை நூதன முறையில் செயல்படுத்த சில அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
கிராமங்கள்தோறும் தற்போதே முதல்கட்டமாக பணம் பட்டுவாடா செய்ய சில அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக பறக்கும் படையினருக்கு தகவல்கள் வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT