Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

பாக். வளைகுடா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதி உதவியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை: மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை

பாக். வளைகுடா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதிஉதவியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்கான பாக். வளைகுடாதிட்டம் கடந்த 2017 ஜூலையில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகுகள் வாங்க மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. 3 ஆண்டுகளில் 2 ஆயிரம்இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற திட்ட மிடப்பட்டது. தமிழக அரசின் நடப்பாண்டு மீன்வளத் துறை கொள்கைவிளக்கக் குறிப்பில், ‘42 இழுவலைபடகுகள், ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 43 படகுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற,படகு ஒன்றுக்கு ரூ.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத் தொகை போதுமானதாக இல்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுமானத்துக்கு ரூ.1 கோடியே 30லட்சம் செலவாகும் என்று கொச்சிகப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப அறிக்கை கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுமானத்துக்கு நிதியை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள்கட்டுமானத்துக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடல் மீன்வள மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது அரசியல்உள்நோக்கம் கொண்டது. இந்த மசோதாவால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கரையில் இருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் நடைபெறும் மீன்பிடி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த தற்போது எந்த சட்டமும் இல்லை. அதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும்,இந்திய கடல் எல்லைப் பகுதியில்வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள்,ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், இந்த மசோதா மூலம் நமது இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

கடல் மீன்வள சட்டத்தின் கீழ்,மீனவர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் ரூ.1,000 அபராதம் செலுத்தவேண்டியிருக்கும். தமிழகம், கேரளத்தில் உள்ள சட்டங்களின்படி இந்த அபராதத் தொகை அதிகமாக உள்ளது.

கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக தமிழகத்தில் சிறப்புபொருளாதார பூங்கா, ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்படும். இந்த சிறப்புப் பொருளாதாரப் பூங்காவுக்கான அடிக்கல்நாட்டு விழா வரும் நவம்பரில் நடைபெறும். இந்தத் திட்டத்தின் மூலம் மீனவப் பெண்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள். மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படும். பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா திட்டத்தின்கீழ் 5 மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். கோயில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கோயில்கள் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உள்நோக்கம் கொண்டது

விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர்எல்.முருகன் கூறும்போது, ‘‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் உள்நோக்கம் கொண்டவை.மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணாவின் சில பகுதிகளில்மட்டுமே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கச் செய்வது இச்சட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்ஆகிய மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எந்தப்போராட்டங்களும் நடைபெறவில்லை. நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். விவசாயிகளிடம்இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் தொடரும் என்று பிரதமர் மோடியும் தெளிவுபடுத்தியுள்ளார். முதல்முறையாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

2014-ல் பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x