Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

ஆன்லைனில் நடைபெறும் வழக்கு விசாரணை: வருமானமின்றி தவிக்கும் இளம் வழக்கறிஞர்கள்

சென்னை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைனில் நடந்து வருவதால், சீனியர்களிடமிருந்து முறையாக தொழிலைக் கற்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமலும் இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2020 மார்ச் மாதத்தில் தொடங்கிய கரோனா ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கிய நீதிமன்றப் பணிகள், இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

வழக்கு விசாரணைகள் கடந்த18 மாதங்களுக்கும் மேலாக காணொலிக் காட்சி வாயிலாகவே நடந்து வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசுவழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவே ஆஜராகி வருகின்றனர்.

தமிழகத்தில் 1.10 லட்சம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவுசெய்து, தொழில்புரிந்து வருகின்றனர். இதில் 3-ல் ஒரு பங்கு வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள்.

பெரும்பாலான இளம் வழக்கறிஞர்கள் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து சென்னைமற்றும் மதுரைக்கு வந்து, சீனியர்களிடம் தொழில் கற்று வருகின்றனர்.

காணொலியில் விசாரணை

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சீனியர்கள் காணொலி மூலமாக மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ள நிலையில், தற்போது 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களே இயங்கி வருகின்றன. இதேநிலை மதுரையிலும் உள்ளது. வழக்கமாக அனைத்து நீதிமன்றங்களிலும் சீனியர்கள் ஆஜராக முடியாது. முக்கிய வழக்குகளில் மட்டும் சீனியர்கள் ஆஜராகிவிட்டு, மற்ற வழக்குகளில் ஜூனியர்கள் ஆஜராக வாய்ப்பு கிடைக்கும்.

இதனால், அபிடவிட் தயாரிப்பில் தொடங்கி, அன்றாட வழக்குவிசாரணைகளுக்கான கோப்புகளை தயார் செய்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வது, மனுதாக்கல் செய்வது, வாதத்தின்போது சீனியருக்கு தேவையான நோட்ஸ்களை எடுத்துக் கொடுப்பது, நீதிமன்றத்தில் தன்னம்பிக்கையுடன் தனியாக ஆஜராகி வாதிடுவது என இளம் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால், தற்போது வழக்குகள் காணொலி மூலமாக நடைபெறுவதால், சீனியர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், ஒரே இடத்தில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக அனைத்து வழக்குகளிலும் சுலபமாக ஆஜராக முடிகிறது.

இதனால் நீதிமன்றங்களில் நிதர்சனமாக நடைபெறும் நேரடி வழக்கு விசாரணைகளைக் கண்டு தொழில் கற்கும் வாய்ப்பு இளம் வழக்கறிஞர்களுக்கு பறிபோய் உள்ளது. அதேபோல, எல்லா வழக்குகளும் சீனியர்களுக்கே செல்வதால், இளம் வழக்கறிஞர்கள் பலர் வருமானமின்றியும் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இளம் வழக்கறிஞர்கள் சிலர் கூறும்போது, "உயர் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது. கரோனாவைக் காரணம் காட்டி, அவசர வழக்குகள் மற்றும் முக்கிய வழக்குகள் மட்டுமே தற்போது பட்டியலிடப்படுகின்றன. இதனால் மற்ற வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளது.

மேலும், காணொலியில் ஆஜராக தொழில்நுட்ப வசதிகள் எல்லாவழக்கறிஞர்களிடம் இல்லை. பள்ளிகள்கூட திறக்கப்பட்டு விட்டன. அடுத்த 3 மாதங்களில் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் என நீதிமன்றங்களின் வேலைநாட்களும் குறைவாக உள்ளன.

வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா?

எனவே, வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வழக்கமான முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x