Published : 09 Oct 2021 03:12 AM
Last Updated : 09 Oct 2021 03:12 AM
நாளை நடக்கும் 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்குவதாக உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 24.45 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 34 ஆயிரத்து 407 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் கிராமப் புறங்களில்தான் அதிகம் தடுப்பூசி போட்டுள்ளனர். ஊரக பகுதியில் 63 சதவீதம் பேரும், மாநகராட்சியில் 55.74 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நாளை (அக்.10) தமிழகம் முழுவதும் 5-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. மதுரை மாநகராட்சியில் 500 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 900 இடங்களிலும் முகாம் நடக்கிறது. ஊரகப் பகுதியில் 100 சதவீதம் இலக்கை எட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பஞ்சாயத்து கிராமங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு சிறப்புப் பரிசுகளை அறிவித்துள்ளனர். இதற்காக அந் தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து தடுப்பூசி முகாம் பற்றிய விவரங்களையும், அதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வந்தால் சிறப்பு பரிசுகளையும் தருவதாக அறிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் சைக்கிள், மிக்ஸி, குக்கர், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் பெயர்கள் ஊராட்சி ஒன்றிய அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT