Published : 02 Jun 2014 08:15 AM
Last Updated : 02 Jun 2014 08:15 AM

ஐஏஎஸ் தேர்வு வயது வரம்பை 6 ஆண்டுகள் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்: தீவிர ஆலோசனையில் பணியாளர் துறை

ஐஏஎஸ் தேர்வு வயது வரம்பை 6 ஆண்டுகள் அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

வயது வரம்பு நிர்ணயம்

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்பட 24 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் என்ற போட்டித் தேர்வை ஆண்டு தோறும் நடத்துகிறது. இதற்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 33 ஆகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம், பொதுப் பிரி வினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பி லும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளிலும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினரின் வயது வரம்பு 32 ஆகவும், ஓபிசி-யினருக்கு 35 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 37 ஆகவும் உயர்ந்துள்ளது.

பாஜக தேர்தல் வாக்குறுதி

இந்த புதிய வயது வரம்பின்படியே இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு விரை வில் வெளியாகும் என்றும் யூபிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 6 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் பட்டது.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வரும் தமிழக மாணவர்கள் சிலர், இந்த விவகாரம் தொடர் பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் டெல்லியில் வியாழக்கிழமை நேரில் முறையிட் டனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அவரும் இந்த விஷயத்தை மத்திய அரசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றார்.

6 ஆண்டுகள் உயர்த்த திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு வயது வரம்பை உயர்த்துவது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றும் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தங்களிடம் கூறியதாக தமிழக மாணவர்கள் தெரிவித்தனர்.

பாஜக தலைவரான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிப்படி வயது வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்த சலுகை, தொடர்ந்து நிலையாக நடைமுறையில் இருக்குமா? அல்லது 2 ஆண்டுகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆராயப்படலாம். வயது வரம்பு 6 ஆண்டுகள் உயர்த்தப்படும் பட்சத்தில் பொதுப்பிரிவினர் 36 வயது வரையும், ஓபிசி பிரிவினர் 39 வயது வரையும், எஸ்சி எஸ்டி வகுப்பினர் 41 வயது வரையும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x