Published : 08 Oct 2021 03:38 PM
Last Updated : 08 Oct 2021 03:38 PM
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த வாரம் முதல்கட்ட அகழாய்வு பணி முடிவடைந்த நிலையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் மேற்கொண்ட மேலாய்வில் குடுவை மற்றும் பிணைப்பு முகட்டு ஓட்டைக் கண்டெடுத்தனர்.
இது குறித்து, ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
"சங்ககாலத்தைச் சேர்ந்த கோட்டை, கொத்தளங்களைக் கொண்ட பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஆம்போரா குடுவையை ஒத்த சுடுமண் குடுவையின் அடிப்பாகம் கண்டெடுக்கப்பட்டது. இதை, அகழாய்வு மேற்கொண்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியனிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
ரோம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட திரவப்பொருட்களானது ஆம்போரா எனும் குடுவைகளில் அடைத்து பல்வேறு நாடுகளில் வணிகம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உலகம் முழுவதும் ஏராளம் கிடைத்துள்ளன.
இந்தியாவில் குஜராத்தில் துவாரகா, கேரளாவில் பட்டினம், புதுச்சேரியில் அரிக்கமேடு, ஆந்திராவில் சந்தரவல்லி, தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் புகலூரிலும், ஆத்தூரிலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் இக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் டூர்நுஸ், குஜராத்தில் துவாரகா, புதுச்சேரியில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த ஆம்போரா குடுவைகளின் அடிப்புற அமைப்பைப்போன்றே பொற்பனைக்கோட்டையிலும் கிடைத்துள்ளது.
ரோம் உள்ளிட்ட மேலைநாடுகளில் ஒயின், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லவும், சேமிக்கவும் கடைபிடித்த அதே தொழில்நுட்ப அறிவுடன் இங்கிருந்து உற்பத்தியான மருந்துப்பொருட்கள், வாசனை திரவியங்கள், எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட திரவப்பொருட்களை இவ்வகையான குடுவைகள் மூலம் உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்றிருக்கவும் வாய்ப்பிருப்பதை அனுமானிக்க முடிகிறது,
மேற்கூரை ஓடுகள்:
கோட்டையின் மேற்புற மதில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் கூரை ஓடுகள், ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதே வடிவத்துடனும், நீர் வடிவதற்கான வரிப்பள்ளம், ஆணிக் குமிழ் பொறுத்துவதற்கான துளை உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது.
பழமையான ரோமாபுரி கட்டுமானங்களில் தெக்குலா எனும் சுடுமண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓடுகளின் பக்கவாட்டு பிணைப்பு பகுதியில் நீள் வாக்கிலமைந்த இம்ரெக்ஸ் எனும் சிறிய முகட்டு ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை வெளிப்படுத்தும் வகையில், இங்கிலாந்து நாட்டின் ஸ்கிப்டன் நகரிலுள்ள கிரவென் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதே அமைப்பிலான சுடுமண் இணைப்பு ஓட்டினை பொற்பனைக்கோட்டையின் வடக்குப்புற வாயிற் மேட்டில் கண்டுபிடித்துள்ளோம்.
இதன் நீளம் 6.2 செ.மீ., 3.3 செ.மீ. முகட்டின் உயரம், 6 செ.மீ. அடிப்புற அகலம் கொண்டதாக உள்ளது. கோட்டையின் மேற்புற கூரையில் சுடுமண் ஓடுகள், ஆணிக் குமிழ்கள் மற்றும் மரச்சட்டங்களில் பிணைக்கப்பட்டிருந்துள்ளது.
மேலும், கசிவு ஏற்படாத வண்ணம் 2 ஓடுகளை பிணைக்கும் இடத்தில் சிறிய வடிவிலான பிணைப்பு முகட்டு ஓடுகள் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்ய முடிகிறது
இதன்மூலமாக, கோட்டையின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகள், கொத்தளங்களில் ஓட்டினாலான கூரையால் வேயப்பட்ட கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தியிருந்ததை உறுதி செய்ய முடிகிறது.
பொற்பனைக்கோட்டையில் வசித்த மக்கள் வெளிநாட்டு தொடர்புகளோடு மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் கிடைத்துள்ளன.
அடுத்தக்கட்ட தொடர் அகழாய்வுகளை பொற்பனைக்கோட்டை அரண்மனை மேட்டுப் பகுதியில் மேற்கொள்ளும்போது, சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரண் மற்றும் கோட்டை குறித்து அனைத்து கருத்துகளுக்கும் வலுசேர்க்கும் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளன. எனவே, தொடர் ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறை மூலம் தமிழக அரசு செய்யும் என நம்புகிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT