Published : 08 Oct 2021 03:06 PM
Last Updated : 08 Oct 2021 03:06 PM
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது.
புதுவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது.
உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுங்கட்சி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, தேர்தல் அறிவிப்பை வாபஸ்பெற்று, சட்டவிதிகளின்படி ஒதுக்கீடு செய்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டான 2019-ம் ஆண்டு அறிவிப்பாணையை ரத்து செய்தது. மேலும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் பின்பற்றிய நடைமுறையின்படி புதிய இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கிடையாது.
இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பழங்குடியினர் இடஒதுக்கீட்டை குடியரசுத்தலைவர் அங்கீகரித்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு அளிக்காதது சட்டவிதிகளுக்கும், சமூகநீதிக்கும் புறம்பானது என கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நகராட்சி, கொம்யூன், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கும், கவுன்சிலர் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு விபரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2006ல் புதுவை நகராட்சியில் இருந்த 42 வார்டுகள், 33 ஆக குறைந்துள்ளது. உழவர்கரை நகராட்சியில் இருந்த 37 வார்டுகள், 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல காரைக்கால், மாகே, ஏனாம் நகராட்சிகளிலும் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் கவுன்சிலர் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வார்டுகள் குறைக்கப்பட்ட இடங்களில் அருகில் உள்ள சில வார்டுகளை இணைத்துள்ளனர். ஒரு சில வார்டுகளில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. பட்டியிலினத்தவர் அதிகம் வசிக்காத பகுதிகள் பட்டியிலனத்தவர், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாளை காலை புதுவை சட்டமன்றத்தில் உள்ள கமிட்டி அறையில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க வரும்படி அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT