Published : 08 Oct 2021 02:26 PM
Last Updated : 08 Oct 2021 02:26 PM
தஞ்சாவூர் அருகே 92 வயதான மூதாட்டியின் உடல் எரிந்துகொண்டிருந்த நிலையில், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்துப் பேரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரும், அதே ஊரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் 27 வருடங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அஜித் (வயது 26) என்ற மகன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேலு இறந்து விட்டதால் தனலட்சுமி, தனது தாய் செல்லம்மாள் வீட்டில் மகன் அஜித்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனலெட்சுமியும் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.
எரிந்த நிலையில் மூதாட்டி உடல்
வாதநோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை (92) சிறு வயதில் இருந்தே அஜித் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை அஜித் வீட்டின் முன்பகுதியில் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. இதனை அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர்.
அப்போது அந்த நெருப்பில் செல்லம்மாள் உடல் எரிந்த நிலையிலும், வீட்டில் உள்ள பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அஜித்தின் உடைகள் எரிந்தும் கிடந்தன இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பேராவூரணி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பேரனிடம் விசாரணை
தகவல் அறிந்ததும் பேராவூரணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அஜித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித், நான் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது பாட்டி இறந்து கிடந்தது. நான் கடவுளிடம் கேட்டேன். அவர் எதையும் வைக்காமல் எரித்து விடு என்றதால் வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் பாட்டியோடு சேர்த்து எரித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அஜித் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவர்தான் பாட்டியை எரித்துக் கொன்றாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT