Published : 08 Oct 2021 01:53 PM
Last Updated : 08 Oct 2021 01:53 PM

நச்சுக் கழிவாகும் காவிரி: ஆற்று நீர் தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்துக: அன்புமணி

ஐஐடி ஆய்வில் காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து ஆற்று நீர் தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. காவிரியில் அதிக மாசுக்கள் கலந்திருப்பதை ஏற்கெனவே அறிந்திருப்பதாலும், அதைச் சரிசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் இது அதிர்ச்சியளிக்கவில்லை. அதே நேரத்தில் காவிரியைப் பாதுகாப்பதற்கான தருணம் வந்துவிட்டதை இத்தகவல்கள் காட்டுகின்றன.

காவிரி ஆற்றில் கலந்துள்ள கழிவுகள் குறித்து சென்னை ஐஐடி நடத்திய விரிவான ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ என்ற பன்னாட்டு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் ஐபுரூஃபன், டிக்லோஃபெனாக் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள், அடினோலோல், ஐசோபிரெனலின் போன்ற உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள், காஃபின் போன்ற தூண்டுப் பொருட்கள், சிப்ரோஃப்ளோக்சசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்கள் போன்ற மருத்துவ மாசுக்களும், ஆர்சனிக், துத்தநாகம், குரோமியம், ஈயம் மற்றும் நிக்கல் போன்ற உலோக மாசுக்களும் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதாகப் பன்னாட்டு ஆய்வு இதழில் கூறப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் கலந்திருக்கும் மருந்து மற்றும் உலோக மாசுக்களால் நீர்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். மருத்துவக் கழிவுகள் மிகக் குறைந்த அளவில் காவிரியில் கலந்திருந்தாலும் கூட, அது மனிதர்களுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி ஆறு சார்ந்த சூழல் அமைப்புகளையும் அவை சிதைத்து, சீரழித்துவிடும்.

காவிரியில் மாசுக்கள் கலப்பது புதிதல்ல. காவிரியில் கலக்கும் மாசுக்களால் மக்களுக்கு இனிதான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூற முடியாது. காவிரி ஆற்றில் கலந்துள்ள மாசுக்களால், காவிரி நீரைப் பயன்படுத்தும் மக்கள் ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர். இதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில் காவிரியில் குளித்தால் நோய்கள் தீரும் என்ற உன்னத நிலை இருந்தது; ஆனால், இப்போது காவிரியில் குளித்தால் தோல் நோய்கள் முதல் தொற்று நோய்கள் வரை அனைத்தும் பீடிக்கும் என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் புனித நதியாக இருந்த காவிரி, இப்போது புற்றுநோயைக் கூட ஏற்படுத்தும் கழிவுகளின் கலவையாக மாறிவிட்டதுதான் சோகம்.

நான் கூறும் இந்த எச்சரிக்கை தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. புனித நீராடும் தலங்களில் ஒன்றாகத் திகழும் கும்பகோணம் காவிரியில் 52 வகை நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேட்டூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் உள்ளிட்ட ஆலைகளில் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகை நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சாயக் கழிவுகளும், இவற்றுக்கெல்லாம் முன்பாக பெங்களூரில் தினசரி 150 கோடி லிட்டர் கழிவு நீரும் காவிரியில் கலக்கிறது.

காவிரி தோன்றும் இடத்தில் புனிதமாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும்தான் உருவாகிறது. ஆனால், அதில் இந்த அளவுக்குக் கழிவுகள் கலக்கும்போது அதன் புனிதம் கெட்டுவிடுகிறது. இந்த உண்மைகளைத் தொடர்ந்து பாமகவும், பசுமைத் தாயகம் அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன. காவிரியைக் காக்கவும், தூய்மைப்படுத்தவும் வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘‘கரம் கோப்போம் & காவிரி காப்போம்’’ என்ற பெயரில் ஒகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டேன். அதன் பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற பெயரிலான திட்டத்தை முந்தைய அதிமுக அரசு அறிவித்தாலும், அதற்காக மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காததால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கழிவுப் பொருட்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதுதான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணமாகும். இத்தீமைகள் தடுக்கப்படாவிட்டால் காலப்போக்கில் காவிரி, கழிவுநீர் சாக்கடையாக மாறுவதைத் தடுக்க முடியாது.

எனவே, காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தவும், காவிரி ஆற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x