Last Updated : 07 Oct, 2021 04:18 PM

 

Published : 07 Oct 2021 04:18 PM
Last Updated : 07 Oct 2021 04:18 PM

புதிய கரோனா தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள்: ஜிப்மரில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

ஆராய்ச்சியிலுள்ள புதிய கரோனா தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஜிப்மரில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகளால் கடந்த சில மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். தற்போது ​​ஆறு கோவிட் தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரப் பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், தடுப்பூசிகள் தேவைப்படும் என்ற நிலையில், ஆராய்ச்சியில் உள்ள புதிய கரோனா தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, ஜிப்மரில் புதிதாக ஒரு தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) தனது ‘மிஷன் கோவிட் சுரக்ஷா’ திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கிறது.

இதுபற்றி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"புதிய தடுப்பூசிகளுக்கு அதிக செயல்திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட காலப் பாதுகாப்பு, ஒரே ஒரு டோஸ், நாசித்துவாரங்களில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள், மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயனுள்ள தடுப்பூசிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் கரோனா ஏற்படுத்தும் வைரஸின் மரபணு மாற்றங்களைக் கொண்ட புதிய வகைகள் வெளிப்படும்போதும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம்.

உலக அளவில் புதிய கரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது 120க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ ஆராய்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால், இவை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஜிப்மரில் உள்ள கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவு புதிய கரோனா தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்களின் தொடர்புப் பட்டியலை முன்கூட்டியே தயாரிக்கிறது. புதிய கரோனா தடுப்பூசிகள் மீதான சோதனைகளில் விருப்பமுள்ளோர் இணையலாம். சில சோதனைகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டு சோதிக்கவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தடுப்பூசி எடுத்துள்ளவர்களும் இச்சோதனையில் பங்களிக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் மேலும் தகவலை https://bit.ly/3ypMREy இதில் காணமுடியும்"

இவ்வாறு ஜிப்மர் இயக்குநரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x