Published : 07 Oct 2021 03:06 PM
Last Updated : 07 Oct 2021 03:06 PM
மோசமான நிலையில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு இல்லம் இருப்பதாகப் புதுவை ஆளுநர், முதல்வரிடம் பாரதிதாசன் பேரன் புகார் அளித்துள்ளார்.
புதுவை மாநிலத்துக்குப் பெருமை தரும் மாபெரும் அடையாளமாகத் திகழ்கிறது, பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம். கடந்த 29.04.1971ல் பாவேந்தர் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது.
பாவேந்தருக்குப் பிறகு அங்கு வாழ்ந்து வந்த அவரது குடும்பத்தினர் அன்றைய காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கென அதனை அரசிடம் ஒப்படைத்தனர். பாவேந்தர் நினைவு அருங்காட்சியக மறுசீரமைப்பை உரிய முறையில் அரசு செய்யவில்லை.
மோசமான நிலையில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தை மறுசீரமைப்பு செய்யக்கோரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோருக்கு மனுவை பாவேந்தர் பேரன் கோ.செல்வம் அனுப்பியுள்ளார்.
அருங்காட்சியகம் தொடர்பாக அவர் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
''பாவேந்தர் பாரதிதாசன் நினைவு இல்லத்தை அரசிடம் அவரது குடும்பத்தாராகிய நாங்கள் ஒப்படைத்தோம். அதுகுறித்த கல்வெட்டும் இல்லத்தின் முகப்பில் உள்ளது. ஆனால், அது ஏனோ பலகை வைத்து மூடப்பட்டுள்ளது. மேலும் அந்த இல்லத்தை ஒட்டிய புறப் பகுதிகளில் பாவேந்தர் உலவியுள்ளார். அங்கு அவருக்குப் பல கவிதைகள், கருத்துகள், உருவாகியதை அருகில் இருந்து பார்த்தவன் நான். ஆனால், அங்கு அவர் குறித்த பல விவரங்கள் அடங்கிய பலகைகள் இடக்கு மடக்காக உள்ளன. இதனால் பயனொன்றுமில்லை.
மேலும் அண்மையில் ஆளுநர் ஆணைப்படி இந்த நினைவு இல்லம் புனரமைப்பு மற்றும் சீரமைப்புகள் தொடங்கின. இந்தப் பணிகளை புதுவை அரசு பொதுப்பணித்துறை எடுத்துச் செய்கிறது. ஏனோ இவை இன்னமும் முழுமை பெறவில்லை. இந்தக் கட்டிடத் தூண்களில் அடிக்கப்பட்ட வண்ணங்கள் சில நாட்களில் பல் இளிக்கின்றன. மேலும் மழைக்காலம் இது. மேலிருந்து வரும் மழைநீரால் அங்கு அழகுற மலேசியத் தமிழர்கள் தந்த பாவேந்தர் சிலைக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அங்கு பாவேந்தரின் பல்வேறு பாடல்களின் அடிப்படையிலான பாடல் வரிகள் பொறிக்கப்பட்ட வண்ண ஓவியங்கள் இருந்தன. அந்தக் கவிதைகள் தற்போது இல்லாமல் ஓவியங்கள் மட்டுமே உள்ளன.
மேலும், பல படங்களைக் காணவில்லை, காரணம் கேட்டால் இன்னமும் புதுப்பிப்புப் பணிகள் நிறைவேறவில்லை என்று கூறுகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் பாட்டனார் பாவேந்தர் இல்லத்துக்கு இந்த வகையில் ஏற்பட்ட மோசமான, பரிதாபமான நிலைக்கு யார் காரணமோ அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கவும், மேலும் மிகவும் கவனமாக, ஆனால் சிறப்பாகப் புனரமைப்புப் பணிகளை விரைவில் முடித்திடவும் ஆணையிட வேண்டும்.
மேலும் இந்த நினைவு அருங்காட்சியகம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முழுமையான ஆராய்ச்சி மையமாக அறிவிக்க வேண்டுகிறோம். எனவே, இதன் பொன்விழாவை ஆண்டு முழுவதும் அரசு பொருத்தமான முறையில் கொண்டாட வேண்டும்"
இவ்வாறு பாரதிதாசன் பேரன் கோ.செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT