Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய வழித்தட விரைவு ரயில்களில் புதிய வகை 3-ம் வகுப்பு ஏசி ரயில் பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டிகளில் பயணிக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவு ரயில்களில் குறைந்தகட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் வகையில், ‘3ஏசி எகானமி’ ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. இந்தப் பெட்டிகள், புதியதாக தொடங்கப்பட்டுள்ள பிரயாக்ராஜ் - ஜெய்ப்பூர் (02403) விரைவு ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, மற்ற விரைவு ரயில்களிலும் இந்த ஏசி பெட்டிகளை படிப்படியாக விரிவுபடுத்த ரயில்வே திட்ட மிட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
‘3ஏசி எகானமி’ பெட்டிகளில் 83 படுக்கைகள் இருக்கும். 3ஏசி-யைவிட 8 சதவீதம் கட்டணம் குறைவாக இருக்கும். மேலும், மடக்கக் கூடிய டேபிள்கள், ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனி ஏசி துவாரங்கள், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகள் மற்றும் கழிவறையில் அகலமான கதவு, தனித்தனியான ரீடிங் விளக்கு, செல்போன் சார்ஜ் வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் ஒலிபெருக்கி, மேம்பட்ட தீயணைப்பு சாதனம், சிசிடிவி கேமரா, புதிய வடிவில் ஏணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த தாவது:
17 பெட்டிகள் ஒதுக்கீடு
பயணிகளின் வசதிக்கு ஏற்றார்போல், புதிய வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் வகையில் ‘3ஏசி எகானமி’ பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு முதல்கட்டமாக 17 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பெட்டிகள் வந்தவுடன் பாண்டியன், ராக்ஃபோர்ட், சேரன், கன்னியாகுமரி, நெல்லை, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய வழித்தடவிரைவு ரயில்களில் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய வகை ஏசி ரயில் பெட்டிகளில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT