Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ காப்பியத்தை சீனம், ஜப்பனீஸ், கொரியன், சிங்களம் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘மணிமேகலை’. சிலப்பதிகார காப்பியத்தின் கதாபாத்திரங் களான மாதவி, கோவலனுக்குப் பிறந்த மணிமேகலையைப் பற்றிக்கூறும் இலக்கியமாகும்.
பவுத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கை குறிப்பு மற்றும் பவுத்த மதத்தின் அறநெறிகளை 30 அத்தியாயங்கள், 4,861 அகவல் அடிகளாக இந்தக் காப்பியத்தை ‘சீத்தலைச் சாத்தனார்’ இயற்றியுள்ளார்.
பாலி, சம்ஸ்கிருதம், தமிழ்உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் இயற்றப்பட்ட பவுத்த மத நூல்கள் பல்வேறு காரணங்களால் அழிந்தபோதிலும், மணிமேகலை காப்பியம் மட்டுமே அழிவில் இருந்து தப்பியது. அதன்படி, பவுத்த மதக் கருத்துகளை எடுத்துரைக்கும் தலைசிறந்த நூலாகவும், மிகவும் தொன்மையான தாகவும் இது கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘மணிமேகலை’ காப்பியம் தற்போது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் 15 வெளிநாட்டு மொழிகளிலும், பாலி, லடாக்கி, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 8 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: உலகிலேயே பவுத்த மதக் காப்பியமாக மணிமேகலை மட்டுமே எஞ்சியுள்ளதாக, பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
அதில், பவுத்த மத அறநெறிகள், அதுகுறித்த அரிய தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, பவுத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் மணிமேகலை காப்பியத்தை கொண்டுசெல்ல மத்திய தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, மலேசியா (மலாய்),கம்போடியா (கெமர்), இந்தோனேசியா (இந்தோனேசியா), லாவோஸ் (லாவோ), மியான்மர் (பர்மீஸ்), சீனா (மாண்டரின் - சீனம்), திபெத்திய மொழி, தாய்லாந்து (தாய்), வியட்நாம் (வியட்நாமிஸ்), ஜப்பான் (ஜப்பனீஸ்), மங்கோலியா (மங்கோலியன்), வடகொரியா, தென்கொரியா (கொரியன்), பூடான் (திஃசொங்கா), இலங்கை (சிங்களம்), நேபாளம் (நேபாளி) ஆகிய நாடுகளின் 15 மொழிகள், பாலி, லடாக்கி, சீக்கியம் உள்ளிட்ட 3 இந்திய மொழிகள் என மொத்தம் 18 மொழிகளில் மணிமேகலை காப்பியம் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள், அறிஞர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இக்காப்பியத்தை ஒரு மொழியில் மொழிபெயர்க்க ரூ.2.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளன.
பின்னர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் அவை நூல்களாக வெளியிடப்படும். இதன்மூலம், சர்வதேச அளவில் தமிழ் காப்பியம் சிறப்புமிக்க தகுதியை பெறும். அதேபோல, இந்தி, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் மணிமேகலை மொழி பெயர்க்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT