Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

பாம்பன் கடலில் அமையும் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலப் பணி மார்ச்சில் நிறைவடையும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ராமேசுவரம்

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் பணிகள் மார்ச் 2022-க்குள் நிறைவடையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டதாலும் , பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதாலும், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதாக, மத்திய ரயில்வே அமைச்சகம் 2018-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. தொடர்ந்து ரயில்வே சார்பில் புதிய ரயில் பாலம் கட்ட ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை இயந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.279.9 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது. ரயில்வே நிர்வாகம் 31.09.2021-க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக புதிய பாம்பன் பாலப் பணிகள் சில மாதங்கள் தடைபட்டன.

தொடர்ந்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை மற்றும் பாம்பன் வடக்கு கடற்பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த மிதவைகள், மிதவைகளிலிருந்த கிரேன்கள் காற்றின் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தன. இதனால் பணிகள் சில நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 2021-க்குள் பணிகளை முடிக்க முடியவுல்லை.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பன் கடலில் கட்டப்படும் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் பணிகள் மார்ச் 2022-க்குள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x