Published : 06 Oct 2021 08:47 PM
Last Updated : 06 Oct 2021 08:47 PM
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி காயம் அடைந்த பெண் கூலித் தொழிலாளியை தனது காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.சின்னதுரை இன்று பிற்பகல் (அக்.6)அனுப்பி வைத்தார்.
கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கூலி வேலை முடித்துவிட்டு நடந்து சென்ற கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை (60) மீது வாராப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
அதில், பலத்த காயம் அடைந்த மணிமேகலை சாலையோரம் துடிதுடித்துக்கொண்டு இருந்தார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியே சென்ற கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, காரை நிறுத்தி தனது காரில் மணிமேகலையை ஏற்றி கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதுவரை, சாலையோரமாக நின்றபடியே கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும், கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, அந்த இளைஞரை போலீஸார் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து கார் திரும்பி வந்ததும், காரில் ஏறி எம்எல்ஏ எம்.சின்னதுரை புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட மணிமேகலையை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
எம்எல்ஏவின் மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT