Published : 06 Oct 2021 07:10 PM
Last Updated : 06 Oct 2021 07:10 PM
அம்முண்டி கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு கூட பதிவாகாத நிலையில் காலி வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, தங்கள் பணியை நிறைவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி கிராம ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கிராமத்தில் பட்டியலினப் பெண்கள் இரண்டு பேர் மட்டும் வாக்காளர்களாக உள்ளனர். எனவே, கிராம ஊராட்சித் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் கூறினர்.
இதனால், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் அதற்கு உட்பட்ட 9 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெறவில்லை. ஆனால், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்பதால் அம்முண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 213 முதல் 217 வரை என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளை அமைத்தனர். இந்த ஊராட்சியில் 1,033 பெண்கள், 1,012 ஆண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 2,057 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
ஆனால், தேர்தல் புறக்கணிப்பு காரணமாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலிலும் இன்று (அக்.6) நடைபெற்ற வாக்குப் பதிவில் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்தப் பணியும் இல்லாமல் நாள் முழுவதும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அதேநேரம், கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலரை வாக்களிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர்களும் கிராம மக்களின் கட்டுப்பாடு காரணமாக வாக்களிக்காமல் பின்வாங்கினர்.
இதையடுத்து, அம்முண்டி ஊராட்சி வாக்குச்சாவடிக்கு 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று தெரிவித்தனர். இறுதிவரை வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை என்பதால் அம்முண்டி ஊராட்சிக்கான வாக்குச்சவாடியில் வைக்கப்பட்ட 5 வாக்குப் பெட்டிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. காலிப் பெட்டிக்கு அதிகாரிகள் சீல் வைத்துவிட்டுத் தங்களது பணியை முடித்துக்கொண்டனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வாக்குப்பதிவில் கிராம மக்களின் முடிவில் அரசு நிர்வாகம் தலையிட விரும்பவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், அம்முண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் 5 வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அளித்துள்ளோம். அதுவாவது வந்து சேருமா என்பது 12-ம் தேதிதான் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...