Published : 06 Oct 2021 05:56 PM
Last Updated : 06 Oct 2021 05:56 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 10 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் அணை 98.86 மில்லியன் கன அடி நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டும் தறுவாயில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டமும் 98.86 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் குமார் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறியதாவது:
"வெப்பச் சலனம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜவ்வாதுமலை தொடர்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆண்டியப்பனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆண்டியப்பனூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பு 216.5 ஏக்கர் ஆகும். இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டினால், குரிசிலப்பட்டு அணைக்கட்டு வழியாக நீர்வரத்து கால்வாய் மூலம் 14 ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம், சுமார் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புன்செய் நிலம், ஏரிகள் மூலம் 2,055 ஏக்கர் நன்செய் நிலம் என, மொத்தம் 5,025 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி அணையில் இருந்து 40 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஆண்டியப்பனூர் அணை நீர்மட்டம் 98.86 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்தக் கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியாகும். 8 மீட்டர் உயரம் கொண்டது.
அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி சின்ன சமுத்திரம், வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிக்குப்பம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிக்குட்டை ஏரி வழியாகச் சென்று பாம்பாற்றை அடையும். மேலும், மற்றொரு கிளையாக கணமந்தூர் ஏரி, புதுக்கோட்டை ஏரி வழியாகச் சென்று திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக தற்போது சிம்மணபுதூர் ஏரி, பொம்மிக்குப்பம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, பெருமாம்பட்டு ஏரி, ஜடையனூர் ஏரி, உதயேந்திரம் ஏரி, விண்ணமங்கலம் ஏரி, பசிலிகுட்டை ஏரி, துளசிபாய் ஏரி என, மொத்தம் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
அதேபோல, 3 ஏரிகளில் 90 சதவீதம் தண்ணீரும், 2 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீரும், 6 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும் உள்ளன. மற்ற ஏரிகளில் 25 சதவீத தண்ணீரே உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அடுத்த ஒருசில நாட்களில் கூடுதலாக ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்".
இவ்வாறு உதவிப் பொறியாளர் குமார் தெரிவித்தார்.
கடந்த முறையைப் போல ஆண்டியப்பனூர் அணை தற்போது நிரம்பினால் பாசன வசதிக்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் என, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பதிவான மழையளவு விவரம்:
ஆலங்காயம் 38 மி.மீ., ஆம்பூர் 41 மி.மீ., வடபுதுப்பட்டு 51.60 மி.மீ., நாட்றம்பள்ளி 13.30 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 13 மி.மீ., வாணியம்பாடி 23 மி.மீ., திருப்பத்தூர் 15.10 மி.மீ., என சராசரியாக 27.80 மி.மீ. மழையளவு பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment