Last Updated : 06 Oct, 2021 05:43 PM

 

Published : 06 Oct 2021 05:43 PM
Last Updated : 06 Oct 2021 05:43 PM

மதுரையில் ரவுடிகளுக்குத் துணிச்சல் கூடியுள்ளது; குற்றச்செயல்கள் அதிகரிப்பு: காவல் ஆணையரிடம் செல்லூர் ராஜூ மனு

மதுரை

மதுரை மாநகரில் ரவுடிகளுக்குத் துணிச்சல் கூடியுள்ளது. இங்கு அதிகரிக்கும் குற்றச் செயல்கள், போக்குவரத்து நெரிசல்களைத் தடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக செல்லூர் கே.ராஜூ இன்று காவல் ஆணையரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

''மதுரை நகரில் சமீபகாலமாக வழிப்பறி, கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே எடுத்த நடவடிக்கையைப் போன்று ஆங்காங்கே புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும். சோதனைச் சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். இரவு ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும். கீரைத்துறை காவல் நிலையம் வில்லாபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கீரைத்துறை பகுதிக்கெனப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தி, கண்காணிக்க வேண்டும். மதுரையை மீண்டும் அமைதி நகரமாக மாற்றிடவேண்டும்.

மேலும், மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. முக்கிய ரோடுகளில் விரைவாகச் செல்ல முடியவில்லை. குறுகிய சாலைகளின் நடுவில் தடுப்பு வேலி போடப்பட்டுள்ளதால் ஏற்படும் வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் நெரிசலில் மாட்டிக்கொள்வதால் நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சுற்றுலா மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் வாகனங்கள் சரியான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.

மதுரை மக்களின் நலன் கருதி போக்குவரத்து நெருக்கடியுள்ள தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைக்கக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கோரிப்பாளையம் தேவர் சிலை - அண்ணா பேருந்து நிலையம் ரவுண்டானா, நெல்பேட்டை அண்ணா சிலை- முனிச்சாலை சந்திப்பு சிக்னல் வரையிலும், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் பிபிகுளம் பாலம் வரையிலும், கீழவாசல் சிக்னல்- செயின்ட்மேரீஸ் சர்ச் வரையிலும் ஒருவழிப் பாதை, அதிலுள்ள தடுப்பு வேலிகளை அகற்ற வேண்டும்''.

இவ்வாறு செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’நகரில் சாலைகள் மோசமாக உள்ளன. எங்களது ஆட்சியின் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்குப் பிரச்சினை, போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிக்கின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவிலும், ஒருவழிப் பாதையிலும் தடுப்புச் சுவர்களை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக பனகல் ரோட்டில் வாகனங்கள் தொடர்ந்து நிற்பதால் ஆம்புலன்ஸ் போக முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபற்றி மாநகரக் காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். செயின் பறிப்பு, கொலை போன்ற குற்றச் செயல்களும் சமீபத்தில் அதிகரிக்கின்றன. இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வலியுறுத்தினோம்.

மதுரையில் ரவுடிகளுக்குத் துணிச்சல் கூடியுள்ளது. மாநகராட்சி டெண்டர்களை ஒருவரே எடுத்துள்ளார். ஹவுசிங் போர்டு டெண்டரிலும் முறைகேடு உள்ளிட்ட ஆளுங்கட்சியின் அத்துமீறல்கள் உள்ளன. தொடர்ந்து மதுரை அமைதிப் பூங்காவாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும் என்ற திமுக அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

எங்களது ஆட்சியில் குறிப்பிட்ட இடங்களில், அகலமான சாலைகளில் மட்டுமே நடுவில் தடுப்புச் சுவர் போட் டோம். தற்போது தேவையில்லாத இடங்களில் தடுப்புச் சுவர்களை ஏற்படுத்தியுள்ளனர். காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற குறைகளைச் சொல்லவில்லை. ரவுடி தொல்லையை ஒழிக்க வேண்டும்’’ என்று செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x