Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசராதிருவிழா இன்று (அக்.6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மைசூருவுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
நடப்பு ஆண்டு தசரா திருவிழா இன்று (அக்.6) தொடங்குகிறது. இதையொட்டி நேற்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இன்று (அக்.6) காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். கரோனா காரணமாக கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. அக்.15-ல் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
வழக்கமாக கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கும் சூரசம்ஹாரம், பக்தர்களின்றி கோயில் முன்பு நடக்கிறது. அக்.16-ல் காப்பு களையப்படும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதால், கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். கடலில் நீராடி, செவ்வாடை தரித்து அம்மன் சன்னதியில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT