Last Updated : 06 Oct, 2021 03:11 AM

 

Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

குப்பையைத் தரம் பிரித்து அளிக்க ‘பக்கெட் சிஸ்டம்’- கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை

அனைத்து வகை கடை உரிமையாளர்களும் நீலம் மற்றும் பச்சை வண்ண பக்கெட்டுகள் மூலமாக கட்டாயமாகக் குப்பையைத் தரம் பிரித்துக் கொடுக்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் நாள்தோறும் 800 முதல் 1000 டன் குப்பை சேகரமாகிறது. இவை லாரிகள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பையை பொதுமக்கள், கடைக்காரர்கள் தரம் பிரிக்காமல் கொட்டுவதால், இவற்றை தரம் பிரிக்கும்போது கூடுதல் பணிச்சுமை, நிதி விரயம் ஆகிறது.

இதை தவிர்க்க, அனைத்து வகை கடைகளிலும் நீலம் மற்றும் பச்சை வண்ண பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அவர்களது சொந்த செலவிலேயே வைத்து, குப்பையை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகரில் 250 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு, 100 வார்டுகளிலும் 1200 பேர் வரை சிறிய ரக வாகனம் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பையை சேகரித்து வருகின்றனர். இவர்கள் தெருக்களுக்கு செல்லும்போது குப்பையை அளிக்காத நபர்கள், பிற நேரங்களில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையைக் கலந்து கொட்டி விடுகின்றனர்.

இதுதவிர, காய்கறி, பழங்கள் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், சாலையோரக் கடைகள், தனியார் நிறுவனங்கள் என பலவற்றிலிருந்தும் வெளியாகும் குப்பை தரம் பிரிக்கப்படாமல் ஒருசேர கொட்டப்படுகிறது.

இதைத் தடுக்கவே, அனைத்து வகை கடைகளும் ‘பக்கெட் சிஸ்டத்தை’ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தெருக்களுக்கு செல்லும்போது குப்பையை தரம் பிரித்து கொடுக்காமல், திறந்த வெளியில் கொட்டும் வீட்டு உரிமையாளர்கள், கடை உரிமையாளர்களை அடையாளம் கண்டு அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அபராதம் விதிக்கவும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கு செல்லும்போது திறந்த வெளியில் குப்பை இருந்தால் அந்த பகுதிக்கான தூய்மைப் பணியாளரிடம் விசாரிக்கப்படும். குப்பையைக் கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதையறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x