Published : 05 Oct 2021 08:05 PM
Last Updated : 05 Oct 2021 08:05 PM

சொந்தத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.97.49 லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டுத் திடல், பூங்காவைத் திறந்துவைத்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5.10.2021) கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.97.49 லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், மைதானம், பூங்காவைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாகச் செயல்படவுள்ள அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட செம்பியம், ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை முதல்வர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். மேலும், மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அடுத்து, செம்பியம், பார்த்தசாரதி தெருவில் ரூ.26.18 லட்சம் செலவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இறகுப் பந்து மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உபகரணப் பொருட்கள் மற்றும் கல்வி உதவித்தொகை, தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், தள்ளுவண்டிகள், காது கேட்கும் கருவிகள், மீன்பாடி வண்டிகள் என 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திரு.வி.க. நகர், 5-வது தெருவில் 7,500 சதுர அடி பரப்பளவில், ரூ.56 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டுக் கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவைத் தமிழக முதல்வர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x