Published : 05 Oct 2021 07:42 PM
Last Updated : 05 Oct 2021 07:42 PM
புதுச்சேரியின் சூப்பர் முதல்வர் தமிழிசைதான். ரங்கசாமி தலையாட்டி பொம்மை என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மகளிர் காங்கிரஸுக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மகிளா காங்கிரஸ் புதுச்சேரி பொறுப்பாளருமான நடிகை நக்மா பேசியதாவது:
"புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் காங்கிரஸாருக்கு அதிக இடங்களை ஒதுக்கித் தர வேண்டும். பெரும்பாலும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களின்போது மகளிருக்கு வாய்ப்பு கிடைப்பது குறைவு. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவுக்கு மகளிர் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்க வேண்டும்.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் காங்கிரஸார் அதிக இடங்களில் போட்டியிட்டு வெல்வது அவசியம். அதற்கு காங்கிரஸ் நிர்வாகிகளும் துணை நிற்க வேண்டும். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் உறுப்பினர்கள் சேர்த்தலைப் பரலாக மேற்கொள்வது அவசியம். மாதந்தோறும் புதுச்சேரி வந்து மகளிர் காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளையும், தேர்தல் பணிகளையும் மேற்கொள்வேன். கட்சியைப் பலப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலிலும், அதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெல்ல வேண்டும்".
இவ்வாறு நக்மா குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில், "தற்போது புதுவையின் சூப்பர் முதல்வர் ஆளுநர் தமிழிசைதான். அவர் என்ன சொன்னாலும் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் செயல்படுவார். காங்கிரஸ் ஆட்சியில் அரசு எடுத்த முடிவையே செயல்படுத்தினோம். இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கும், என்.ஆர்.காங்., பாஜக கூட்டணி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்.
புதுவையில் காங்கிரஸ்தான் நம்பர் 1 கட்சி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. யாராவது நாங்கள்தான் நம்பர் 1 கட்சி என்றால், அந்தக் கூட்டணிக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு வார்டு ஒதுக்கீடு மறு ஆய்வு செய்ய உள்ளதால் இப்போது தேர்தல் இல்லை என்று புதுச்சேரி அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு ஆளத் தகுதியில்லை, நிர்வாகம் தெரியவில்லை என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT