Published : 05 Oct 2021 05:24 PM
Last Updated : 05 Oct 2021 05:24 PM
போராட எந்தப் பிரச்சினையும் கையில் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயில்களைத் திறக்கப் போராட்டம் நடத்தி வருவதாக, அமைச்சர் சேகர்பாபு பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்றார். அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டைப் புனரமைக்க அரசு உதவி செய்யும். வள்ளலாரின் பணிகளை விரிவுபடுத்தும் விதமாக வள்ளலார் சர்வதேச மையம் விரைவில் கட்டப்படும்’’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பின்பு கோயில்களைத் திறக்கக் கோரி பாஜக நடத்திவரும் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பி வரும் கேள்விக்கு பதிலளித்த அவர், ’’தமிழக அரசியல் களத்தில் ஆட்சியை எதிர்த்து, மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தரப் போராடுவதற்கு எதுவும் கையில் இல்லை. அதனால் இன்றைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
திருக்கோயில்களை நாள் முழுவதுமாக மூடவில்லை. வாரத்தில் மூன்று நாட்கள், அதிகமாகக் கூட்டம் கூடும் நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் வழிபாட்டுக்குத்தான் தடை விதித்து இருக்கிறோமே தவிர இறைவனுக்கு நடத்த வேண்டிய அனைத்துப் பூஜைகளும் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தப் போராட்டம் என்பது என்னைப் பொறுத்தவரையில் தேவையற்றது’’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT