Published : 05 Oct 2021 03:48 PM
Last Updated : 05 Oct 2021 03:48 PM

மருத்துவப் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகின்றனர்; ஒரு சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

மருத்துவப் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று (அக். 05) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"

''தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் முன்னணியில் இருந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் முன்னேறி வருகிறது. செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் செப்.19 ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

செப்.26 அன்று மூன்றாவது தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை விட கூடுதலாக 24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நான்காவது தடுப்பூசி முகாம் அக்.3 அன்று 20 ஆயிரம் முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு, 14 மாவட்டங்களில் மழை காரணமாக 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்திடும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சேவைத்துறை பணியாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர், மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து செய்திட அறிவுறுத்தியும், தடுப்பூசி செலுத்துவதில் உள்ள நெளிவு, சுளிவுகளைக் கேட்டறிந்தும், அப்பணிகளில் ஈடுபடுவோரைப் பாராட்டியும் உள்ளார்.

வாரம், வாரம் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் 8 மருத்துவ முகாம்களுக்கு நேரடியாக முதல்வர் சென்று ஆய்வு செய்துள்ளார். இப்பணிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்தியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் பணியாற்றி செவிலியர்கள் மிகுந்த மன உளைச்சலோடு உள்ளதாக வதந்தியான செய்திகளைப் பரப்பிவிடுகின்றனர். அது உண்மை இல்லை.

செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் மிகச் சிறப்பான பணிகளால் தமிழகத்தில் 1,500-க்கும் கீழ் கரோனா தொற்றின் எண்ணிக்கை இருந்து வருகிறது. மாவட்டத்துக்கு மாவட்டம் மிக குழந்தை எண்ணிக்கையில் தொற்றின் அளவு இருந்து வருகிறது.

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு பணியில் கிட்டத்தட்ட 300 செவிலியர்கள் இருந்து வருகின்றனர். நெருக்கடியான காலகட்டத்தில் செவிலியர்களின் பணி அளப்பரியது. அதேபோல் தொற்று குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது மிக எளிதான வகையில் பணிகளைத்தான் செவிலியர்கள் ஆற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவதால், முதல்வர் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், செவிலியர்களுக்கு மாற்றுப் பணிகள் இருந்தால், அவர்கள் அந்த வாரத்தில் எந்த நாளிலாவது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவத்துறைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முதல்வர் மருத்துவத் துறையின் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க அறிவுறுத்தியுள்ளார். தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறவர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்துள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 89 கோடி ரூபாய் வரை செலவாகும்.

ஆகையால், தமிழக மக்களை கரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பதற்குப் பணியாற்றி வருகிறோம். இதுபோன்ற வதந்தியான செய்திகளைப் பரப்பிட வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x