Published : 05 Oct 2021 11:11 AM
Last Updated : 05 Oct 2021 11:11 AM

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில அறிவுரைகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x